எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட இராணுவம் மறுப்பு; முபாரக் ஆட்சி கவிழும் ஆபத்து
Written on 5:45 AM by பூபாலன்(BOOBALAN)
எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.
மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. எனவே முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் வன்முறை போராட்டத்தில் குதித்தனர்.இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.
மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.
ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது.
எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். “அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம்.
பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று அவர் கூறினார். ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது.
இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.