அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு
Written on 5:17 AM by பூபாலன்(BOOBALAN)
ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தி.மு.க.,விற்கு தாவினர். திருமங் கலம் எம்.எல்.ஏ.,வாக இருந்த வீரஇளவரசன் மரணம் அடைந்தார். தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ம.தி.மு.க.,வில் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களைப் பெற்ற ம.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு பிரச்னைகளில், அ.தி.மு.க., எடுக்கும் முடிவையே ம.தி.மு.க., பின்பற்றியது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதிலும், தோழமை கட்சியை ஆதரிப்பதிலும் ம.தி.மு.க., உறுதியாக இருந்தது. அத்தகைய கட்சிக்கு தற்போது தொகுதி பங்கீடு விவகாரத்தில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.
அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் முதல் கட்டம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் கேட்டனர். இதற்கு எந்த பதிலும் அ.தி.மு.க., தரப்பில் தரப்படவில்லை. மூன்றாவது கட்டமாக 25 தொகுதிகளாவது கிடைக்கும் என, ம.தி.மு.க.,வினர் எதிர்பார்த்து உடன்பாடு ஒப்பந்தத்திற்கு அழைப்பார்களா என காத்திருந்தனர். ஆனால், 10 முதல் 12 தொகுதிகளே ஒதுக்க முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வைகோ அதிர்ச்சி அடைந்தார். குறைந்த தொகுதி எண்ணிக்கை முடிவை அவரால் நம்ப முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவின் தலைவரும், திருப்பூர் மாவட்டச் செயலருமான ஆர்.டி.மாரியப்பன், தன் சொந்த ஊருக்கு விரக்தியோடு புறப்பட்டுச் சென்றார். குறைந்த தொகுதிகளை பெற, ம.தி.மு.க., தயாராக இல்லை. குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது ஒதுக்கீடு செய்தால் தான் ஒப்பந்தத்தில் வைகோ கையெழுத்திடுவார் என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பொறுமையாக இருக்கவும், அ.தி.மு.க., தலைமையிடமிருந்து நல்ல முடிவுக்காக வைகோ காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி 18 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால், 11 தொகுதிகள் மட்டுமே தர அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூ.,வும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இணையாக 18 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இந்திய கம்யூ., கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் மட்டுமே தர முடியும் என, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் ஒரே தொகுதிகளைக் கேட்பதால், அந்தச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, இரு கம்யூ.,கட்சிகளும் தங்களுக்குள் பேசி, ஒரு சுமுக முடிவுடன் வரும்படி அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், மார்க்சிஸ்ட் கட்சி 14 தொகுதிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளுக்கும் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பது குறித்து பேச்சு நடப்பதால் அ.தி.மு.க., கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது முடிவு அ.தி.மு.க., கையில் உள்ளதாக கம்யூனிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் முடிவைப் பொறுத்து, எந்த நேரமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.