கோவில் நிகழ்வுகள்
Written on 11:15 PM by பூபாலன்(BOOBALAN)
காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2-1/2 கோடியில் தங்க கிரீடம்
காஞ்சி சங்கர மடம் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்காக ரூ.2-1/2 கோடியில் தயாரிக்கப்பட்ட தங்க கிரீடத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காணிக்கையாக வழங்குகிறார்.இது குறித்து காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்களிடம் பெறப்பட்ட தங்கம், வைரம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சுமார் 3 அடி உயரம் கொண்ட, 14-1/2 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் தயாரிக்கப்பட்டது. இதை வருகிற 21-ந் தேதி திருப்பதி ஏழுமலையானுக்கு நான் (ஜெயேந்திரர்) காணிக்கையாக வழங்குகிறேன்.
காஞ்சி மகா பெரியவர் என அன்போடு அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவாக அவருக்கு குரு காணிக்கையாக காஞ்சி சங்கர மடம் சார்பில் விலைமதிப்பற்ற தங்கத்தால் ஆன தங்க ரதம் பெங்களூரில் தயாரிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜ பெருமான் நடனமாடுவதைப் போல காஞ்சி மகா பெரியவர் நடனமாடுவது போன்ற படம் உருவாக்கப்பட்டு இந்த தங்க ரதத்தில் பொருத்தப்பட உள்ளது.
இந்த தங்க ரதம் வருகிற விஜயதசமியன்று மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சங்கர மடத்தில் வலம் வரும்.
இந்த ரதம் பவுர்ணமி நாட்களிலும், குரு வாரங்களிலும், பெரியவர் அனுஷ நட்சத்திர நாட்களிலும் பிருந்தாவனத்தைச் சுற்றி வலம் வரும். இந்த தங்க ரதத்தை பாதுகாப்பதற்காக மடத்தில் இடம் தேர்வு செய்ய உள்ளோம்.






