புத்தாண்டு முதல் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்கிறது
Written on 11:56 PM by பூபாலன்(BOOBALAN)
சர்வதேச அளவில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்ததன் விளைவாக, சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஜனவரி மாதம் முதல் 22 ரூபாய் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நாளை நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெற்காசிய நாடுகளில் இந்திய நுகர்வோர் தான் அதிகளவு எல்.பி.ஜி.,யை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். உள்நாட்டு தேவைக்காக, எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சமையல் காஸ் இறக்குமதி செய்கின்றன.
மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் ஒரு பிரிவான, பெட்ரோலிய திட்டமிடல் பகுப்பாய்வு குழு, 2010-2011ம் ஆண்டுக்கான எல்.பி.ஜி.,யின் தேவை ஒரு கோடியே 40 லட்சம் டன் என மதிப்பிட்டுள்ளது. எல்.பி.ஜி., இறக்குமதி ஆண்டுதோறும் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் எல்.பி.ஜி., விலை ஆகஸ்டில் டன் ஒன்று 600 டாலருக்கு கீழே இருந்தது; தற்போது 1,000 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஆகஸ்ட் மாதத்தை விட திரவ பெட்ரோலியம் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், சமையல் காஸ் சிலிண்டர், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை ஏற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை.இதனால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து, நாளை (22ம் தேதி) மத்திய அரசு முடிவு செய்யவுள்ளது.
"எண்ணெய் நிறுவனங்களுக்கு, எதிர்பார்த்ததை விட 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக' பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
இந்த இழப்பை சமாளிக்கவும், திடீரென எரிபொருள் விலை உயர்வை தடுக்கவும், இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிடவுள்ளது.அதோடு, சர்வதேச விலை உயர்வு மற்றும் குளிர்கால தேவையை சமாளிக்கும் வகையில், சமையல் காஸ் சிலிண்டரின் விலையை ஜனவரி 1 முதல் 367 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சமையல் காஸ் சிலிண்டர் விலை 345 ரூபாயாக உள்ளது.நாளை கூடவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் காஸ் விலையை உயர்த்திக்கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சமையல் காஸ் மற்றும் டீசல் விலை உயர்வு நிச்சயம். ஆனால், எவ்வளவு உயரும் என்று சொல்ல முடியாது' என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.