வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
Written on 9:55 PM by பூபாலன்(BOOBALAN)
புதுடில்லி : வெங்காயம் ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு அதிகரித்தது பிரதமரையும், அரசையும் கவலையுறச் செய்ததால், இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது, மத்திய அரசை கவலை யடைய செய்துள்ளது.சென்னையிலும் கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது. இதனால், வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய விவசாய அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டார். அதே நேரத்தில், வெங்காயம் விலை உயர்வையடுத்து, அதன் ஏற்றுமதிக்கு முதலில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டது.தற்போது இந்த தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெங்காயம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் இறக்குமதிக்கு இதுவரை 5 சதவீதம் சுங்கவரியும், 4 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க விதிக்கப்படுவது.வெங்காயம் இறக்குமதி மீதான இந்த இரண்டு வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில் விலை குறையும் என, மத்திய நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.
இதற்கிடையில், வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.மேலும், வெங்காய விலை குறைய இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படியும், மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேபினட் செயலர் சந்திரசேகர் கேட்டு கொண்டுள்ளார். மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் போன்ற அமைப்புகள் இறக்குமதியில் தீவிர முனைப்பை காட்டும்.மேலும், உற்பத்தி செய்யப் படும் இடத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்ல, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாகவும், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாலும், மொத்த விலை குறைய துவங்கி விட்டது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக மையமான நாசிக்கில், நேற்று வெங்காயத்தின் மொத்த விலை 42 சதவீதம் வரை குறைந்தது. டில்லியில் உள்ள சந்தைகளிலும் வெங்காயத்தின் மொத்த விலை 29 சதவீதம் வரை குறைந்தது.
நாசிக் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் ஒரு குவிண்டால் வெங்காயம் 5,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 3,702 ரூபாயாக குறைந்தது. "புதிதாக விளைந்த வெங்காயமும் விரைவில் சந்தைக்கு வர உள்ளதால், அடுத்த ஏழு முதல் 10 நாட்களிலும் வெங்காயத்தின் சில்லறை விலை கணிசமாக குறையும்' என, மத்திய விவசாயத்துறை செயலர் பி.கே.பாசு கூறியுள்ளார்.வெங்காயத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் சில தென்மாநிலங்களில் அதிகளவு மழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டதே காரணம். அத்துடன் பதுக்கலும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பாக்., வெங்காயம்: வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லை வழியாக, 450 டன் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே 13 லாரிகளில் லாகூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் பஞ்சாப் வந்தடைந்துள்ளது.வெங்காய ஏற்றுமதி மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், "தாமதமான நடவடிக்கை. கறுப்பு சந்தை பேர்வழிகளை சரியான நேரத்தில் ஒடுக்க மத்திய அரசு தவறி விட்டது' என்றார்.
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் : வெங்காய விலை மக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், ஜாம்ஜெட்பூரில் உள்ள டயர் விற்பனையாளர் ஒருவர், "தங்கள் கடையில் டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது லாரிக்கான டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயமும், காருக்கான டயர் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயமும் தரப்படும் என கூறியுள்ளார். சத்னாம்சிங் காம்பீர் என்ற பெயர் கொண்ட இவர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும், அகில இந்திய சீக்கிய மாணவர்கள் சம்மேளன தலைவராகவும் உள்ளார்.