தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
Written on 4:44 AM by பூபாலன்(BOOBALAN)
""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும். தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.
காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.