ராசா- தொடரும் சோதனைகள்
Written on 11:43 PM by பூபாலன்(BOOBALAN)
இந்தியாவில் 2 ஜி அலைக்கற்றைஒதுக்கீடு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை புதன்கிழமை(15.12.10) பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.
சென்னை உட்பட பல இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் இடங்களும் அடங்கும்.
பெருவர்த்தக நிறுவனங்களுக்கான ஆதரவுகளை முன்னெடுக்கும் நீரா ராடியா, டிராய் என்ற இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல், முன்னாள் அமைச்சர் ஆ ராசாவின் சொந்த கிராமத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றில் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வரும், திமுகவின் தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார் ஆகியோர் இணைந்து நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான தமிழ் மையம் அமைப்பின் அலுவலகமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐயுடன் இணைந்து அமலாக்கப் பிரிவினரும் நாடு தழுவிய அளவில் இடம் பெற்ற சோதனைகளை நடத்தியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியரான அ. காமராஜின் இல்லத்திலும் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையின் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அ.ராசா கடந்த மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
பதவி விலகிய பிறகு கடந்த வாரம் ராசாவின் வீட்டில் சோதனைகள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.