சென்னையில், ஆட்டோவில் சென்றபோது வழிமறித்து துணிகரம் ரூ.1றி கோடி கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு திருவள்ளூர் அருகே விட்டுச்சென்ற கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு
Written on 9:04 PM by பூபாலன்(BOOBALAN)
சென்னையில் ரூ.1றி கோடி கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆட்டோவில் சென்ற போது வழிமறித்து அவரை கடத்திச்சென்ற கடத்தல்காரர்கள், திருவள்ளூர் அருகே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சென்னை நகரில் ஏற்கனவே நடந்த 2 கடத்தல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
மேலும் ஒரு கடத்தல் சம்பவம்
கொடுங்கைïரில் கிரிஸ் ஆனந்த் என்ற பள்ளி மாணவன் காரில் கடத்தி செல்லப்பட்டு, பின்னர் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டான். ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அடுத்து, அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் ரமேஷின் மகன் பள்ளி மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டான். ரூ.3 கோடி பணம் கேட்டு அவனை காரில் கடத்திச்சென்றனர். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களுக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்து கீர்த்திவாசனை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் 2 பட்டதாரி என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த 2 கடத்தல் சம்பவங்களும் உண்டாக்கிய அதிர்ச்சி அலைகள் ஓய்வதற்கு முன், சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒரு கடத்தல் சம்பவம் நிகழ்ந்தது.
தொழில் அதிபர் மகன்
இந்த முறை கடத்தப்பட்டது 25 வயது இளைஞர் ஆவார். அவரது பெயர் முகமது அசேன். இவரது தந்தை பெயர் காஜா. தொழில் அதிபரான காஜா, பாரிமுனை காசிசெட்டி தெருவில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்களில் முகமது அசேன், முகமது உசேன் ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். அவர்களில் முகமது அசேன் தான் கடத்தப்பட்டார். பி.காம். பட்டதாரியான முகமது அசேன் தனது தந்தைக்கு உதவியாக தொழில் நிறுவனத்தை கவனித்து வந்தார்.
செகரட்டேரியட் காலனி ஏ.கே.சாமி நகர் 6-வது தெருவில் இவருடைய பங்களா வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் முகமது அசேன் கடையில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். ஆட்டோ செகரட்டேரியட் காலனி அருகே மேடவாக்கம் டேங்க் ரோடும்-டெம்பிள் ரோடும் சந்திக்கும் இடத்தில் வந்தது. அப்போது இரவு 10.15 மணி இருக்கும்.
கடத்தல்
அந்த நேரத்தில் திடீரென்று மர்ம கும்பலை சேர்ந்த சிலர் ஆட்டோவை வழிமறித்தார்கள். ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்து கீழே தள்ளினார்கள். பின்னர் முகமது அசேனை மின்னல் வேகத்தில் ஒரு காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் வின்சென்ட்ராஜ் (40) ரோட்டில் நின்றபடி கூச்சல் போட்டார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் ஆட்டோ டிரைவர் அருகில் உள்ள செகரட்டேரியட் காலனி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி விளக்கி புகார் தெரிவித்தார். வால்டாக்ஸ் பகுதியை சேர்ந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
முரண்பட்ட தகவல்கள்
ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது அவர் முரண்பட்ட தகவல்களை கூறினார். முதலில் கடத்தல்காரர்கள் 3 பேர் வந்தனர் என்றும், ஆட்டோவில் கடத்திச்சென்றனர் என்றும் தெரிவித்தார். பின்னர் கடத்தல்காரர்கள் 6 பேர் வந்தார்கள் என்றும், டாடா சுமோ காரில் கடத்திச்சென்றனர் என்றும் கூறினார்.
போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தபோது ஒரு கட்டத்தில் கடத்தல்காரர்கள் அடித்ததால் நான் மயங்கி விழுந்துவிட்டேன். எனவே எத்தனை பேர் வந்தார்கள், எதில் கடத்தி சென்றார்கள் என்று என்னால் சரியாக பார்க்க முடியவில்லை என குழப்பமாக பதில் அளித்தார்.
கடத்தல் பற்றி சரியான தகவல் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று முடிவு எடுக்க முடியாமல் காலை வரையில் போலீசார் கடும் குழப்பத்தில் இருந்தனர்.
ரூ.1றி கோடி கேட்டு மிரட்டல்
கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இணை கமிஷனர் சேஷசாயி (மத்திய சென்னை பொறுப்பு), துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் அசோக்குமார் மற்றும் போலீஸ் படையினர் இரவு விடிய, விடிய தூங்காமல் கடத்தல்காரர்களிடம் இருந்து ஏதாவது தகவல் வருமா? என்று எதிர்பார்த்தபடி இருந்தனர்.
தொழில் அதிபர் காஜாவும், போலீசாரோடு இருந்தார். காலை 8 மணிக்கு கடத்தல்காரர்கள் தொழில் அதிபர் காஜாவோடு செல்போனில் பேசினார்கள்.
உங்கள் மகனை பத்திரமாக வைத்துள்ளோம். போலீசுக்கு போகாமல், ரூ.1றி கோடி பணம் கொடுத்தால் உங்கள் மகனை விட்டுவிடுகிறோம்' என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டனர்.
பணத்துடன் எங்கே வரவேண்டும் என்பன போன்ற தகவல்களை கடத்தல்காரர்கள் கூறவில்லை. ஆனால் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் கோபுரத்தை கண்காணித்தபோது அவர்கள் அண்ணாநகர் `என்' பிளாக் பகுதியில் இருந்து பேசியதை செல்போன் கோபுரம் காட்டி கொடுத்தது.
தேடுதல் வேட்டை
உடனே அண்ணாநகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் தலைமையில், அண்ணாநகர் பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடத்தல்காரர்கள் செல்போனை `சுவிட்ச் ஆப்' செய்துவிட்டதால் செல்போன் கோபுரம் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பகல் 12 மணி வரை கடத்தல்காரர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. தகவலுக்காக போலீசாரும் காத்து இருந்தனர்.
விடுதலை
இந்த நிலையில், பகல் 12.30 மணி அளவில் கடத்தப்பட்ட வாலிபர் முகமது அசேன், அவரது தந்தை காஜாவுடன் செல்போனில் பேசினார்.
கடத்தல்காரர்கள் திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே மெயின் ரோட்டில் என்னை விடுதலை செய்துவிட்டார்கள். நான் வைத்திருந்த ரொக்கப்பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். நான் ஒரு பஸ்சில் ஏறி சென்னை வருகிறேன் என்று அப்போது அவர் கூறினார். பொது தொலைபேசியில் இருந்து பேசுவதாகவும் முகமது அசேன் கூறினார். அதற்குள் போன் கட்டாகிவிட்டது.
சற்று நேரத்தில் முகமது அசேன் மீண்டும் பேசினார். அப்போது அவரிடம், `நீங்கள் பஸ்சில் வரவேண்டாம். அருகில் உள்ள வெங்கல் போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள், அங்கிருந்து நாங்களே உங்களை அழைத்துவருகிறோம்'' என்று போலீசார் கூறினார்கள்.
அதன்படி முகமது அசேன் அங்கு சென்று காத்து இருந்தார்.
சென்னையில் இருந்து உதவி கமிஷனர் நடராஜன் தலைமையில் ஒரு போலீஸ் படையினர் அங்கு சென்று வாலிபர் முகமது அசேனை நேற்று மாலை 4 மணி அளவில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் விசாரணை
வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து முகமது அசேனிடம், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் லட்சுமி, பன்னீர்செல்வம், உதவி கமிஷனர்கள் அசோக்குமார், மதி, சங்கரலிங்கம், நடராஜன் ஆகியோர் மாறி, மாறி விசாரணை நடத்தியதில், கடத்தல் சம்பவம் பற்றி முகமது அசேன் முரண்பட்ட தகவல்களை கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையில், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் ஏராளமானோர் குவிந்துவிட்டனர். முகமது அசேனை படம் எடுக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
விளக்கம்
இதனால், துணை கமிஷனர் லட்சுமியிடம் நிருபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்தது எப்படி? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த துணை கமிஷனர் லட்சுமி, முகமது அசேனை திருவள்ளூரில் இருந்து அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு இது பற்றி முழு விவரங்களையும் போலீஸ் கமிஷனர் வியாழக்கிழமை (இன்று) வெளியிடுவார் என்று சுருக்கமாக கூறினார்.
முகமது அசேன் உண்மையிலேயே கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தியதாக நாடகமாடினாரா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் அவரை நேற்று பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தார்கள்.
அசேனின் பெற்றோர்கள் நேற்று மாலையில்தான் சந்தோஷம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அசேனின் குடும்பத்தினரும், அசேனின் வீடு இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களும் நேற்று காலையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடவில்லை. அனைவரும் சோகமாக காணப்பட்டனர். அசேன் திரும்பி வந்த பிறகு தான் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
-----
`கண்களை கட்டி கடத்தி, புதர்கள் நடுவில் சிறை வைத்தனர்'
வாலிபர் அசேன் போலீஸ் விசாரணையில், தன்னை கடத்தியது பற்றி நேற்று இரவு கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
டாடா சுமோ காரில் 6 பேர் சேர்ந்து என்னை கடத்தினார்கள். கடத்தியவுடன், எனது கண்கள் இரண்டையும், துணியால் கட்டி, கார் சீட் அடியில் படுக்க வைத்து விட்டனர். அதன்பிறகு முள் புதர் நிறைந்த இடத்தில், இரவு முழுவதும் என்னை உட்கார வைத்தனர். அந்த இடம் எது என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் அசேன் கூறியுள்ளார். கடத்தல்காரர்கள் விடுதலை செய்த இடத்திற்கும், அசேனை அழைத்து சென்று போலீசார் பார்வையிட்டனர். அந்த பகுதியிலும் விசாரணை நடத்தினார்கள்.
-----
தொழில் அதிபரை கடத்தி ரூ.5 லட்சம் பறிப்பு
கடத்தப்பட்ட வாலிபர் முகமது அசேனின் தந்தை காஜா ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சென்னையில் வசிக்கிறார். மிகவும் இரக்க குணம் கொண்ட அவர், ஏழை-எளிய மக்களுக்கு தாராளமாக உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. அவரது இரக்க குணத்தை பயன்படுத்தி ஏற்கனவே கடந்த 98-ம் ஆண்டு வியாசர்பாடியை சேர்ந்த ஒரு கும்பலினர் அவரை கடத்தி சென்றுவிட்டனர்.
அப்போது காஜா போலீசில் புகார் கொடுக்காமல் கடத்தல்காரர்கள் கேட்ட ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஓசையில்லாமல் இருந்து விட்டார். பின்னாளில் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலீசில் பிடிபட்டபோதுதான் இந்த தகவல் தெரிய வந்தது. கடத்தல்காரர்கள் 3 பேர் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தற்போது இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.