இறந்த மகளை ஆற்றில் வீசிய தாய் : புதைக்க ரூ.500 கொடுத்த போலீஸ்
Written on 9:15 PM by பூபாலன்(BOOBALAN)
மதுரை : மதுரையில் புதைப்பதற்கு பணம் இல்லாததால் வைகையாற்றில் வீசப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையின் உடல், யானைக்கல் பாலம் அருகே நேற்று கண்டெடுக்கப்பட்டது. அடக்கம் செய்ய போலீசார் நிதியுதவி செய்து மனிதாபிமானத்தை காண்பித்தனர். அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மங்கம்மா (40). மீனாட்சி அம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்கிறார். இவரது நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை கால் ஊனமாக பிறந்தது.
இரண்டரை வயதான இக்குழந்தை மர்மகாய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் இறந்தது. இறுதி சடங்கிற்கு பணம் இல்லாததால், யானைக்கல் பாலம் அருகே வைகையாற்று ஓரம் புதைக்க திட்டமிட்ட மங்கம்மா, தனி ஆளாக குழந்தையை எடுத்து வந்தார். ஆனால், குழி தோண்ட ஆயுதம் எடுத்து வராததால், குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று காலை குழந்தையின் உடல் ஆற்றில் மிதந்தது. இக்குழந்தையுடன் மங்கம்மா பூ வியாபாரம் செய்ததை அடிக்கடி விளக்குத்தூண் போலீசார் பார்த்திருந்ததால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படவில்லை. பின், மங்கம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்த போலீசார், தத்தநேரியில் முறைப்படி அடக்கம் செய்ய இன்ஸ்பெக்டர் சக்கரவரத்தி மற்றும் போலீசார் 500 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்யவில்லை.
If you enjoyed this post Subscribe to our feed