உலக கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர்
Written on 9:55 PM by பூபாலன்(BOOBALAN)
2011-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அதிகாரபூர்வ தூதராக லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஐ.சி.சி. நியமித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, வங்க தேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கோப்பை போட்டியை நடத்துகின்றன.
இப்போட்டிக்கான அதிகாரபூர்வ தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை வியாழக்கிழமை ஐ.சி.சி. அறிவித்தது. உலகக் கோப்பை போட்டியை பிரபலப்படுத்தும் ஐ.சி.சி.யின் நிகழ்ச்சிகளில் சச்சின் கலந்து கொள்வார்.
சச்சினுக்கு இது 6-வது உலகக் கோப்பை போட்டியாகும். பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் மட்டுமே இதுவரை 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார்.
"உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பதே அலாதியானது. அதிலும், இப்போது இந்தியாவில் இப்போட்டி நடக்க உள்ளதை மிகவும் விசேஷமாகக் கருதுகிறேன். சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளோம்' என்றார் சச்சின்.
பேட்டிங்கில் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் 172 டெஸ்டில் விளையாடி 14,292 ரன்களையும், 442 ஒரு நாள் ஆட்டங்களில் 17,598 ரன்களையும் குவித்துள்ளார்.
""எனக்குத் தெரிந்தவரை சச்சின் போன்று உலக அளவில் பிரபலமடைந்த வீரர் யாரும் இல்லை என நினைக்கிறேன். சொந்த நாட்டையும் கடந்து லட்சக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படுபவராக திகழ்கிறார் அவர்.
உலகின் சிறந்த விளையாட்டு வீரர்கள், சச்சின் ஆட்டத்திறன் தொடர்ந்து மேம்பட்டுவருவது குறித்து பாராட்டுகின்றனர். இத்தகைய புகழ்மிக்க வீரர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி.யின் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஹரூன் லோர்கட் தெரிவித்தார்.
If you enjoyed this post Subscribe to our feed