**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Written on 10:34 PM by பூபாலன்(BOOBALAN)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை 20 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.




விழாவையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் கருவறை எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை மூர்த்தி குருக்கள் கையிலேந்தி முதல் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷம் எழுப்பி வழிப்பட்டனர்.

தொடர்ந்து சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதை காட்டுவதற்காக, அம்மன் கருவறையில் ஐந்து அகல் விளக்குகளும், விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேதராக முருகன், அண்ணாமலையார் சமேதராக உண்ணாமலையம்மன், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்கக் கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். மாலை 5.59 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு வந்து கொடி மரத்தின் முன் உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு, அவற்றை கொண்டு 2 ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றும் காட்சியை 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மஹாதீபத்தன்று மட்டுமே கோவில் கொடி மரத்தின் பலி பீடம் அருகே வந்து அருள்பாலிப்பார். மகா தீபதிருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோவில் முதல் பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் ஆகியவை வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகா தீபத்திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஜி.பி., லத்திகாசரண் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிரா மூலம் அனைத்து நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்பட்டன.

If you enjoyed this post Subscribe to our feed

No Comment

Post a Comment

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket