அமைச்சர் லஞ்சமாக கேட்டார் ரூ.15 கோடி: தொழிலதிபர் டாடா பரபரப்பு
Written on 9:18 PM by பூபாலன்(BOOBALAN)
டேராடூன் : "புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக' தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டில்லியில், "21ம் நூற்றாண்டில் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், டாடா குரூப் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா பங்கேற்று சிறப்புரையாற்றினார். தனது வெற்றி குறித்தும், கடைபிடித்த நெறிமுறைகள், கோட்பாடு என பலவற்றையும் விளக்கி, எப்படி சாதிக்க முடிந்தது என முழு வரலாற்றையும் சொல்லிக் கொண்டு வந்தவர்... விமானப் போக்குவரத்தை முதன் முதலாக நடத்திய டாடா நிறுவனத்தால் மீண்டும் அந்த துறையில் நுழைய முடியவில்லை; தோல்வி தான் ஏற்பட்டது என்று கூறி அதிர்வலைகள் ஏற்படுத்தினார்.
அது பற்றி அவர் விவரித்து கூறியதாவது; தனியார் விமான சேவையை முதன் முதலாக துவங்கிய நிறுவனம் என்ற பெருமை எங்களுக்கு இருந்தாலும், மீண்டும் புதிதாக விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து துவக்க மூன்று முறை முயன்றோம். இது தொடர்பாக மூன்று பிரதமர்களை சந்தித்தேன். ஆனால், தனிநபர்களின் குறுக்கீடு காரணமாக என் முயற்சி பலனளிக்காமல் போய்விட்டது.விமான சேவை துவக்க, என்னிடம் ஒரு அமைச்சர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார். இது பற்றி கேள்விப்பட்ட எனது சக தொழிலதிபர் ஒருவர் என்னிடம், "உங்களுக்கு காரியம் சாதிக்கத் தெரியவில்லை.
அந்த அமைச்சர் கேட்ட 15 கோடி ரூபாயை கொடுத்து விட்டு போக வேண்டியது தானே. உங்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாதா என்ன' என்று கேட்டார்.நான் அவரிடம், "எனக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. மேலும், 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் விமான சேவை துவக்க வேண்டிய நிலையில் இல்லை' என கூறினேன். இவ்வாறு தனக்கு ஏற்பட்ட சோதனையை விவரித்த ரத்தன் டாடா, லஞ்சம் கேட்ட அமைச்சர் பெயரை வெளியிடவில்லை. கடந்த 1930ம் ஆண்டு, "டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் வர்த்தக ரீதியாக விமான சேவை நடத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை டாடாவுக்கு உண்டு. பின்னர் 1950ம் ஆண்டு மத்திய அரசு இந்நிறுவனத்தை வாங்கி, "ஏர் இந்தியா' என பெயரிட்டது.பல ஆண்டுகள் கழித்து, 1995, 1997, 2001ம் ஆண்டுகளில் விமான சேவை நடத்துவது தொடர்பாக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் விமான சேவையை நடத்தும் திட்டத்தில் இருந்தது.
கடைசியாக 2001ம் ஆண்டு டாடா முயற்சித்த போது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு என்பது குறிப்பிடத்தக்கது. மாஜி மந்திரி தற்கொலை மிரட்டல் : டாடாவின் புகார் குறித்து, 1996ம் ஆண்டில் தேவகவுடா தலைமையிலான அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த இப்ராகிம் கூறியதாவது:நாட்டு நலன் கருதியே டாடா விமானப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பல கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. ரத்தன் டாடா, தன்னிடம் லஞ்சம் கேட்ட அமைச்சர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், நான் தற்கொலை செய்து கொள்வேன்.இவ்வாறு இப்ராகிம் கூறினார்.
If you enjoyed this post Subscribe to our feed