டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: எண்ணிக்கை 64 ஆக உயர்வு - 80 பேர் காயம்
Written on 9:17 PM by பூபாலன்(BOOBALAN)
டெல்லி கிழக்கு பகுதியில் இருக்கும் லட்சுமி நகரில் உள்ள லலலிதா பார்க் எனும் இடத்தில் நேற்றிரவு 8.15 மணிக்கு 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் அடித்தளம் முதலில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
அதன் மீது 5 மாடிகளும் சரிந்து விழுந்து நொறுங்கி சிதறின. கட்டிடம் இடிந்து விழுந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். கண் இமைக்கும் நேரத்துக்குள் 5 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் உதவி கோரி அலறினார்கள்.
விபத்து குறித்து தீயணைப் புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். ஆனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் மீட்புப்பணிகள் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. மீட்புப் பணிக்கான எந்திரங்களை கட்டிடம் அருகில் கொண்டு செல்வதும் கடும் சவாலாக இருந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் சீரமைப்புக் குழுவினர் 250 பேர் அவசரமாக வர வழைக்கப்பட்டனர்.
அவர்கள் வந்த பிறகே இரவு 10 மணிக்குப் பிறகு மீட்புப் பணிகள் தீவிரமாக தொடங்கி நடந்தன. பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை, போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருடன் அந்த பகுதி மக்களும் கட்டிட இடி பாடுகளை அகற்றுவதில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு இடையே ஏராளமானவர்கள் சிக்கி, உடல் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடந்தனர். நேற்றிரவு 12 மணி வரை 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. மீட்புப் பணிகள் விடிய, விடிய நடந்தன. இன்று அதிகாலை மேலும் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று காலை 9 மணி வரை 64 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளனர். எனவே பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 5 மாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி 80க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை, குருதேக் பகதூர் மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து சிறப்பு டாக்டர்கள் குழு சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான ரத்தங்களும் பெறப்பட்டு வருகின்றன.
4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு டெல்லி சுகாதார மந்திரி கிரண் வாலியா இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். கிழக்கு டெல்லியில் இடிந்து விழுந்த கட்டிடம் தொழில் அதிபர் அம்ரித் சிங் என்பவருக்கு சொந்தமானது. இந்த கட்டிடம் கட்டி முடித்து 15 ஆண்டுகளே ஆகிறது. திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்திருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல்லியில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அது லட்சுமி நகருக்குள் புகுந்தது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் அடித்தளம் பகுதியிலும் மழை தண்ணீர் வெள்ளம் புகுந்து தேங்கியது. இந்த தண்ணீர் நீண்ட நாட்கள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் கட்டிடத்தின் அஸ்திவாரம் கசிந்து பலவீனமானதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கட்டிட உரிமையாளரான தொழில் அதிபர் வாடகை பணத்துக்கு ஆசைப்பட்டு 5-வது மாடி கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் மாநகராட்சியிடம் விண்ணப்பித்து எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை. இந்த கட்டுமானப்பணிக்காக அவர் வேறு மாநிலத்தில் இருந்து 10 கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினரை வரவழைத்திருந்தார்.
அவர்கள் அந்த கட்டிடத்தில் தங்கி இருந்தனர். நீண்ட நாள் தண்ணீர் தேங்கி அஸ்திவாரம் பலவீனமாகி இருந்த நிலையில் 5-வது மாடி கட்டத்தொடங்கியதால் பாரம் தாங்காமல் அழுத்தம் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழுந்து நொறுங்கி விட்டது என்று டெல்லி நிதி மந்திரி ஏ.கே.வாலியா கூறினார். இந்த விபத்தில் பலியானவர்களில் கட்டிட கட்டுமான பணிக்காக வந்திருந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினரே அதிக அளவில் பலியாகி விட்டனர்.
கட்டிடம் இடிந்தது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கட்டிட உரிமையாளர் அம்ரித் சிங் மீது இந்திய தண்டனை சட்டம் 304-வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்ரித்சிங் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
If you enjoyed this post Subscribe to our feed