தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது
Written on 1:31 AM by பூபாலன்(BOOBALAN)
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில், ஒரு கலசம் முற்றிலும் சிதைந்து விழுந்தது. தஞ்சையில் நேற்று காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. மிக அமைதியாக பெய்த மழையில், மாலை 4.30 மணிக்கு ஒரே ஒரு பலத்த மின்னலும், அதைத் தொடர்ந்து கடும் இடியும் விழுந்தது.
அப்போது, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நான்கு கோபுரத்தில் உள்ளிருந்து வெளியே வரும்போது இரண்டாவதாக உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரம் பாதிக்கப்பட்டது. இக்கோபுரத்தில், ஒரு கலசம் முற்றிலும் சிதைந்து கீழே விழுந்தது. முற்றிலும் சிதைந்து கீழே விழுந்த கலசத்தை உடனடியாக கோவில் ஊழியர்கள் அகற்றினர்.
ஆயிரம் ஆண்டு கடந்த பெரிய கோவிலில் இதுவரை இல்லாமல் தற்போது விழுந்த இடி தாக்குதலை பக்தர்கள் அபசகுனமாக எண்ணுகின்றனர். மிகவும் கவலையுடன் பலரும் வருந்தினர். கடந்த செப்டம்பர் 22ம் தேதி தஞ்சையில் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா துவங்கியது.
துவங்குவதற்கு முதல் நாள் செப்டம்பர் 21ம் தேதி காலை பெய்த பலத்த மழையில், தஞ்சை அரண்மனையில் உள்ள ஆயுத கோபுரத்தில் பலத்த இடி விழுந்து கோபுரம் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.