**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

அ.தி.மு.க. ஆட்சியில் தணிக்கைத் துறை வருவாய் இழப்பு என்று கூறியபோது ராஜினாமா செய்தாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

Written on 9:12 PM by பூபாலன்(BOOBALAN)

அ.தி.மு.க. ஆட்சியில் தணிக்கைத் துறை அறிக்கையில் வருவாய் இழப்பு என்று கூறியபோது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேலிக்கூத்தாக்கி விட்டார்



பிரதமர் அலுவலகம், தணிக்கைத் துறை, உச்சநீதிமன்றம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கேலிக்கூத்தாக்கி விட்டார் என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகின்றபோது, 25-2-2006 அன்று வருமான வரி வழக்கிலே இதே ஜெயலலிதாவைப் பற்றி உச்சநீதிமன்றம் "நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் (ஜெயலலிதா) கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கைகளை எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இழுத்தடிப்பீர்கள்'' என்று கேட்டதை மறந்து விடலாமா?

ராசா மீது ஜெயாவும் மற்ற எதிர்க்கட்சிகளும் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து சொல்லுகின்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் எடுத்து வைப்பது தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையில் அரசுக்கு ராசா இழப்பினை ஏற்படுத்திவிட்டார் என்பதாகும். அவர்கள் குறிப்பிடுகின்ற தணிக்கைத் துறை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்பே அந்த அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுவிட்டன.

அனுமானத்தின் அடிப்படையிலே


அந்த அறிக்கையிலே உள்ள ஒரு வாசகம் - "அலைவரிசையின் மதிப்பைக் கணக்கிட்டு அதனால் ஏதாவது இழப்பு என்று சொல்லப்படுவது `அனுமானத்தின்' அடிப்படையிலே மட்டும் சொல்லப்படுவதாகும்.

எனவே தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என்பதெல்லாம் "அனுமானத்தின்'' அடிப்படையிலே சொல்லப்படுவதாகும் என்று அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற தணிக்கை துறை அறிக்கையிலேயே வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறைதானா?

தணிக்கை அதிகாரிகளின் அறிக்கை என்பது ஆண்டுதோறும் அரசின் பல்வேறு துறைகளின் வரவு செலவு கணக்குகளைப் பற்றி ஆய்ந்தறிந்து, அறிக்கை அரசுக்குத் தரப்பட்டு, அந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முறையே வைக்கப்பட்டு, அதன் பின்னர் அதிலே கூறப்படும் குற்றச்சாட்டுகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு, துறைகளின் விளக்கங்களைப் பெற்று அவை பொதுக் கணக்குக் குழுவிலே விவாதிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்திலும் இதுபோன்ற தணிக்கை அதிகாரிகளின் அறிக்கைகள் தரப்பட்டு சட்டப்பேரவையிலே வைக்கப் பட்டுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில்

அ.தி.மு.க. ஆட்சியில் அவ்வாறு வைக்கப்பட்ட தணிக்கை அதிகாரியின் அறிக்கை அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. 3-8-2004 தேதியிட்ட இந்து நாளிதழ் பக்கம் 5ல் "விலை குறைவாக நிர்ணயம் செய்தது பற்றிய 2003-2004ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை - ரூ.1033 கோடி வருவாய் இழப்பு'' என்ற தலைப்பில் முறையாக வரிகள் விதிக்கப்படாததன் காரணமாக 2003-2004ம் ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.1033 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு நிர்வாகத்தின்கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மூலமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செலவுகள் என்ற வகையில் மட்டும் மாநில அரசுக்கு ரூ.3681 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்தப் புள்ளிவிவரங்களை வழங்கிய தமிழ்நாடு தலைமை கணக்காயர் டி.தீத்தன் முறையாக வரிகள் விதிக்காததன் காரணமாகவும், வீணான செலவுகளின் காரணமாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 2002-2003ம் ஆண்டில் ரூ.2982 கோடி; 2001-2002ம் ஆண்டில் ரூ.3930 கோடி; 2000-2001ம் ஆண்டில் ரூ.2621 கோடி; 1999-2000ம் ஆண்டில் ரூ.1901 கோடி என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1.75 லட்சம் டன் நெல்லை அதிகப்படியாக கொள்முதல் செய்ததன் காரணமாக ரூ.61 கோடி இழப்பு ஏற்பட்டது. சரியாக திட்டமிடாததாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவுக்கு இல்லாததாலும், தவறான விலை கொள்கையாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 17 திட்டங்களில் ரூ.96 கோடி மதிப்புள்ள 18,755 மனைகள் விற்பனையாகாமல் உள்ளன''

ராஜினாமா செய்தாரா?

இது மாத்திரமல்ல, அதே நாளைய "இந்து'' முதலமைச்சராக இருந்த ஜெயாவின் துறையைப் பற்றி தணிக்கை அதிகாரி கூறிய செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதில், ``தலைமை கணக்காயர் காவல் துறைக்கு "டெண்ட்''கள் வாங்குவதற்கு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி முறையைப் பின்பற்றாததன் காரணமாக உள்துறையை கடுமையாகச் சாடினார். வெளிச்சந்தை விலையைவிட துப்பாக்கி தொழிற்சாலைகள் கொடுத்த விலைப்புள்ளி கூடுதலாக இருந்தபோதிலும், "டெண்டுகள்'' அந்தத் தொழிற்சாலைகளிடமிருந்தே வாங்கப்பட்டன. இதன் காரணமாக அதிகச் செலவு ஏற்பட்டுள்ளது.''

இவ்வாறு தொடங்கி "இந்து'' தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையையும், அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட தகவல்களையும் விரிவாக வெளியிட்டுள்ளது.

அதே செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்த போதிலும், தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்ட தலைப்பே, "ஆடிட்டர் ஜெனரல் ஆதாரத்துடன் பேட்டி - ஜெ.ஆட்சியில் ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு - மந்திரி, அதிகாரிகளை அடிக்கடி பந்தாடியதால் நிர்வாகம் சீர்குலைந்தது - மத்திய அரசின் மலிவு விலை அரிசி வாங்காததால் ரூ.66 கோடி நட்டம் - 46 திட்டங்கள் தொடங்காமலேயே ரூ.3500 கோடி திரும்ப ஒப்படைப்பு'' என்பதாகும்.

இந்தச் செய்திகளையெல்லாம் பார்த்ததும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன செய்தார்? தணிக்கை துறை அறிக்கையே இவ்வாறு வெளியிட்டுவிட்டது, இதோ நான் பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா செய்தால் மட்டும் போதாது, என்னை நானே கைது செய்து கொள்கிறேன், என்மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றெல்லாம் சொன்னாரா? கிடையாது. என்ன செய்தார் தெரியுமா?

பொதுகணக்கு குழுவில்

இவ்வாறு தமிழ்நாட்டிலுள்ள தணிக்கை அதிகாரி நிருபர்களிடம் கூறியது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளதாகவும், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நடந்ததில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் எடுத்துக்கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முழுப்பக்க அறிக்கையினை தணிக்கை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ஒரு அதிகாரிக் குப் பதில் கூறி சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு அப்போது வெளியிட்டார். இந்தப் பிரச்சினையை அடிப்படையாக வைத்துத்தான் அறிக்கையாகக் கூட அல்ல, அரசின் சார்பாக விளம்பரமாகவே முழுப் பக்கத்திற்குக் கண்டனம் அப்போது வெளியிடப்பட்டது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் வெளிவந்துள்ள ஜெயலலிதாவின் இந்த முழுப்பக்க விளம்பரத்திற்காக மட்டும் தமிழக மக்களின் வரிப்பணம் 1 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் கொட்டி அழப்பட்டது.

ஜெயா வெளியிட்ட அந்த முழுப்பக்க விளம்பரமே எப்படி தொடங்குகிறது என்றால், "தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவரின் 2002-2003ம் ஆண்டுக்கான அறிக்கை வெகு அண்மையில்தான் - 2004 ஜுலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை உரிய கால முறையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொதுக் கணக்குக் குழுவில் விவாதிக்கப்படும். இந்த அறிக்கையில் கடுமையான முறைகேடு எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. சில பொருள்கள் மீது இந்தியத் தணிக்கைத் துறைத்தலைவரின் கருத்தறிவிப்புகளை மட்டும்தான் இந்த அறிக்கை கொண்டுள்ளது. அதைப்பற்றி பொதுக்கணக்குக் குழுவால் உரிய காலமுறையில் விரிவாக விவாதிக்கப்படும். இந்தியத் தணிக்கைத் துறைத்தலைவரின் அறிக்கை மீது பொது கணக்குக் குழு தனது பணியினை முடித்த பின்னரே, இது முழுமை அடையும். ......இவ்வாறு பல நிகழ்வுகளில் கூறப்பட்டிருக்கின்ற இழப்பானது, வெறும் கருத்தியலான இழப்பு என்பதை தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. ஆகவே இந்த விஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறையானதல்ல.''

ஒப்பிட்டு பார்த்தால்

ஜெயலலிதா மீது தணிக்கைத் துறை அதிகாரி குற்றஞ்சாட்டிய போது இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர் தற்போது, எப்படியெல்லாம் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையே முடிவான ஒன்று என்றும், அதனையேற்று ராசாவை கைது செய்ய வேண்டும், வழக்கு போடப்பட வேண்டுமென்றும் சொல்வது எத்தகைய ஈனத்தனமான நோக்கம் என்பதை இந்த இரண்டு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.

ஜெயலலிதா ஆட்சியில் உண்மையிலேயே நடைபெற்று உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஊழல் குறித்துக் கூட, தணிக்கைத் துறை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையிலே கூறப்பட்டதை இங்கே நான் நினைவுபடுத்துகிறேன். அதன் தலைப்பே, "டான்சி - சொத்துக்களை விற்றதில் முறையான அணுகுமுறையை பின்பற்றாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு'' என்பதாகும்.

"........ஒரே பகுதியில் இருந்த டான்சி நிறுவனத்திற்குரிய டான்சி எனாமல்டு ஒயர்ஸ் மற்றும் டான்சி போர்ஜிங்ஸ்க்கு சொந்தமான இரண்டு இடங்களை ஒரு சதுர மீட்டர் ரூ.2080 மற்றும் ரூ.2100 என்ற விலைக்கு விற்றிருக்கும் போது, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் டான்சி பவுண்டரி நிறுவன இடத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1350 என்ற குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார்கள். எனவே அதிகத் தொகையை பெறுகின்ற வாய்ப்பினை டான்சி இழந்துவிட்டது....''

இந்தக் கருத்து தணிக்கைத் துறை அதிகாரியினால் அறிக்கையிலே எழுதப்பட்டு இன்றளவும் அந்தப் புத்தகத்திலே உள்ள வாசகங்களாகும். தற்போது அரசின் சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தகவல் தொழில்நுட்பப் பணிக்காக குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அந்த இடம் குறைந்த விலைக்குக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள இடம் அதிக மதிப்பு கொண்டது என்றும் அதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறைந்த விலைக்கு வாங்கிய இடம், அவருடைய சொந்த நிறுவனத்திற்காக குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகும். தற்போது கழக அரசில் ஒதுக்கப்பட்ட இடம் தனியார் ஒருவர் பங்குதாரராக இருந்து, தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகத்தோடு இணைந்து தகவல் தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கி பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவிருந்தார் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாகும். ஆனால் அந்தத் தனியார் நிறுவனம் அந்த இடத்தைக் கூட தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அரசுக்கு மனு கொடுத்துள்ளார்கள் என்பதிலிருந்தே, யாரோ ஒரு தனிப்பட்டவருக்கு இந்த அரசு உதவி செய்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

திரும்ப கொடுத்திட

இப்படிப்பட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் தனது அறிக்கையில் என்னைப் பற்றிக் கூறும்போது, ஊழலே என்னுடைய வாழ்க்கை முறையாக உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். என்னைப் பற்றியா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருமான வரி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்குகிறேன் என்று சொன்னார்கள்? அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று என்னைப் பற்றியா உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்? ஜெயாவுக்குத்தானே வேண்டுமென்றே விலையைக் குறைத்தும், முத்திரைக் கட்டணத்தைக் குறைத்தும் வாங்கிய நிலத்தை அரசுக்குத் திரும்ப கொடுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கொடநாட்டில் எஸ்டேட் வாங்கிக் கொண்டு, மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவனா நான்? சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலத்தையெல்லாம் பறித்துக் கொண்டதாக ஜெயாவின் தோழமைக் கட்சியாலேயே குற்றம் கூறப்பட்டு, அதற்காக நீதிபதியைக் கொண்டு விசாரித்து, தலித்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலம் கைப்பற்றப்பட்டது உண்மைதான் என்றும், அந்த நிலங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை இன்றளவும் கைப்பற்றி மாளிகை கட்டியிருப்பதிலே அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது நானா? ஜெயலலிதாவா? வெளிநாட்டிலிருந்து தன் பெயருக்கு வந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வங்கியிலே உள்ள தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டு, யார் அனுப்பியது என்றே தெரியவில்லை என்று ஊரை ஏமாற்ற நினைத்த ஜெயலலிதா ஊழல் பேர்வழியா? நானா?

முதலமைச்சராக ஜெயா பொறுப்பேற்பதற்கு முன்பு 1-7-1991ல் ஜெயாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 2 லட்சம். அவர் முதலமைச்சராக ஐந்தாண்டுகள் பொறுப்பிலே இருந்த பிறகு 30-4-1996ல் ஜெயாவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 45 லட்சம் என்றால் அன்றாடம் ஊழலையே வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பது நானா? ஜெயலலிதாவா? வருமானத்திற்கு மீறி ரூ.64 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்றளவும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது என் மீதா? அல்லது அந்த வழக்குக்கு ஆண்டுக் கணக்கில் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பது ஊழல் மகாராணி ஜெயலலிதாவா? நானா? செய்தியாளர்கள் ஒருமுறை ஜெயாவைப் பார்த்து, "உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுகின்றனவே, இந்நிலையில் நீங்கள் பதவி வகிக்க முடியுமா?'' என்று கேட்டபோது, "உச்சநீதிமன்றம் வரையில் விசாரிக்க வாய்ப்பும் காலமும் இருக்கிறது. உச்சநீதிமன்றம் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் மட்டுமே நான் குற்றவாளி ஆவேன், அதுவரையில் நான் குற்றவாளி அல்ல, வெறும் குற்றம்சாட்டப்பட்டவர்தான்'' என்று பதிலளித்ததையெல்லாம் மறந்துவிட்டு, நான் ஊழலை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளேன் என்று சொல்கிறார் என்றால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரரை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராகப் பெற்றுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது அல்லவா?

மறுபிறவி கிடையாது

இத்தனை உண்மைகளையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாம் என்று மகிழ்ச்சிக் கூத்தாடும் மமதையாளர்களுக்கு கடைசி எச்சரிக்கையும், அறிவிப்பும் இதுதான்!

"சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி''

என்று பாரதி கேட்டது போல் -

"தனக்கொரு நீதி

தஸ்ïகளுக்கொரு நீதி''

என்ற மனு தர்மத்திற்கு தமிழகத்தில் மறுபிறவி கிடையாது!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

If you enjoyed this post Subscribe to our feed

No Comment

Post a Comment

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket