விசாரணைக்கு தயார்: "ஸ்பெக்ட்ரம்' ராஜா கூறுகிறார்
Written on 9:13 PM by பூபாலன்(BOOBALAN)
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இதுகுறித்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கூறியுள்ளார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா மீது, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது.
பிரதமர், சட்ட அமைச்சகம், "டிராய்' அமைப்பு ஆகியவற்றின் ஆலோசனைகளை இவர் கேட்கவில்லை என்று அதில் கூறப்பட்டது. இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் ராஜா கூறியதாவது:அரசு 1999ம் ஆண்டில் கொண்டிருந்த தொலைத்தொடர்பு கொள்கையின் அடிப்படையிலும், விதிமுறைப்படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது.
இதுகுறித்து, அரசு விசாரணை நடத்திக்கொள்ளலாம். எனது நிலையை நான், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளேன். நான், என்னுடைய நிலையில் தெளிவாக இருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து, அரசு, கோர்ட்டில் மனு அளித்துள்ளது. அமைச்சராக இருந்தபோது, நான் தனித்து செயல்படவில்லை. அரசின் அங்கமாகத்தான் இருந்தேன். எனவே, இதுகுறித்து, எனது தனிப்பட்ட கருத்தை நான் கூறவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.
If you enjoyed this post Subscribe to our feed