மெட்ரோ ரயிலில் பரபரப்பு பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களுக்கு சரமாரி அடி ஆண்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்
Written on 1:32 AM by பூபாலன்(BOOBALAN)
குர்கான்: மெட்ரோ ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் வித்தியாசமான தண்டனை அளித்தனர். மெட்ரோ ரயில்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்தன.
தங்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஒதுக்க வேண்டும் என்று பெண்கள் கோரி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மகளிர் தினத்தின்போது மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு என்று தனி பெட்டி ஒதுக்கப்பட்டது.
டிரைவர் கேபினுக்கு அடுத்துள்ள முதல் பெட்டி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது ஆனால், பெண்கள் பெட்டியில் ஆண்கள் ஏறிவிடுவதாகவும், அவர்கள் தங்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் பெண்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அரியானா போலீசார் நேற்று முன்தினம் இரவு குர்கான் குரு துரோனோசார்யா ரயில் நிலையத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அம்மாநில பெண் போலீசார் மெட்ரோ ரயில் வந்ததும் பெண்கள் பிரிவுக்கு முன் சென்று நின்றுகொண்டு பெண்கள், பெட்டியின் கதவு திறந்ததும் அதில் இருந்த ஆண்களை அடித்து விரட்டினர்.
சில ஆண்களை பிடித்து எல்லா பயணிகளின் முன்னிலையில் தோப்புக்கரணம் போட வைத்தனர். இதேபோல், டெல்லி ஹவுஸ்காஸ் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களை விரட்டி அடித்தனர். இதுகுறித்த போலீசார் கூறுகையில், ‘‘இவர்களை அடித்துவிரட்டினாலும், அபராதம் விதித்தாலும் மீண்டும் அதே தவறை செய்கின்றனர். தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். படித்தவர்கள் கூட சில சமயங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் வருத்தமான விஷயம். இவர்களை திருத்துவதற்காகத்தான் சில பேரை தோப்புக்கரணம் போட வைத்தோம்’’ என்றனர்.
